உண்மைகளை மறைப்பது தாய் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடை

உண்மையை மறைத்துப் பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தாய் நாட்டின் முன்னோக்கிய பயணத்துக்குத் தடையாக உள்ளது. இவ்வாறு அரச தலைவர் லண்டன்வாழ் இலங்கையர்களிடம் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு பயணம் செய்துள்ள அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவுக்கும் லண்டன் வாழ் இலங்கையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிறுவி, நாட்டை அபிவிருத்தி நோக்கி முன்னெடுத்துச் செல்லும் அரசின் செயல் திட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதில்லை.

சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறுகிய அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுடன் உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்வதற்கு முயற்சிப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.

நாட்டில் சகல துறை சார்ந்தவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரம் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் செயற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டுசெல்வதோடு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார திட்டங்களினால் தற்போது சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளது.
நாட்டுக்கெதிராகக் காணப்பட்ட பன்னாட்டை மீண்டும் நாட்டை நோக்கிக் கொண்டுவர முடிந்துள்ளமையானது கடந்த மூன்று வருடங்களுக்குள் பெற்றுக்கொண்டுள்ள முக்கிய வெற்றியாகும். என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!