ஜெயலலிதா மரணத்துக்கு ஓபிஎஸ் தான் காரணம்: தங்கதமிழ்செல்வன் – புகழேந்தி பேட்டி

ஜெயலலிதா மரணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தங்கதமிழ்செல்வன் மற்றும் புகழேந்தி கூட்டாக தெரிவித்தனர்

திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் தமிழக துணை முதல்வரை விசாரணைக்கு அழைக்க பயப்படுகிறது . ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறிய ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை கமி‌ஷன் இதுவரை அதற்கான ஆதாரத்தை ஏன் கேட்கவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களை விசாரணைக் கமி‌ஷன் ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை. இவர்களை உடனடியாக விசாரிக்கா விட்டால் ஆறுமுகசாமி கமி‌ஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டு எடப்பாடி அரசு பயப்படுகிறது. எச்.ராஜா காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த பின்பும் போலீஸ் துணையுடன் பொதுக்கூட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை கைது செய்யாமல் தமிழக அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது? அரசை மக்கள் கேவலமாக பார்க்க மாட்டார்களா அ.தி.மு.க. அரசை மக்கள் கூடிய விரைவில் தூக்கி எறிவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.