பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட தடை இல்லை: – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

சபரிமலையில் 10 முதல் 50 வயதுடைய பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. திருவாங்கூர் தேவஸம் போர்டு நிர்வகித்துவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, பல்வேறு கட்ட விசாரணைகளைத் தாண்டி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு வந்துசேர்ந்தது.

அவருடன் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கை தொடர்ந்து 8 நாள்களாக விசாரித்த அரசியல் சாசன அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ”கோயில் வழிபாடுகளில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர்கள். வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். ஐயப்ப பக்தர்கள், குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் என்று கூற முடியாது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!