முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தீர்வையற்ற வாகனம் – அமைச்சரவை நிராகரிப்பு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று, தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்திருந்த அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையினால், நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன சலுகையை விடக் குறைவான சலுகை வழங்கப்பட்டதால், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அதை ஏற்க மறுப்புத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் பைஸர் முஸ்தபா, அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகை போன்றே, வடமாகாண முதலமைச்சருக்கும் வாகன சலுகை வழங்கப்படவேண்டும் என்ற அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட போதிலும், நிதியமைச்சர் மங்கள சமரவீர, வாகனக் கொள்வனவு தொடர்பான தன்னுடைய அறிக்கையை மீறும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்தை வலியுறுத்தினார். அமைச்சர் மங்களவின் இந்த எதிர்ப்பையடுத்து, வடமாகாண முதலமைச்சருக்கான தீர்வையற்ற வாகனக் கோரிக்கையை, அமைச்சரவை நிராகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!