நான் நெற்றிக்கண்ணை திறந்தால் சந்திரபாபு நாயுடு சாம்பலாகி விடுவார் – சந்திரசேகரராவ் ஆவேசம்

நான் நெற்றிக்கண்ணை திறந்தால் சந்திரபாபு நாயுடு சாம்பலாகி விடுவார் என்று சந்திரசேகரராவ் ஆவேசமாக பேசினார்.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆட்சி நடந்து வந்தது. கடந்த மாதம் அந்த ஆட்சியை சந்திரசேகரராவ் கலைத்து விட்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாகி வருகிறது. இதற்காக தெலுங்கானாவில் கட்சி பணிகளை சந்திரபாபு நாயுடு முடுக்கி விட்டுள்ளார்.

இது சந்திரசேகரராவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கட்வல் நகரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக தாக்கி பேசினார். அதன் விவரம் வருமாறு:-

சந்திரபாபு நாயுடு செயல்பாடுகள் சரியில்லை. அவருக்கு என்னைப்பற்றி முழுமையாக தெரியாது. இதே நிலை நீடித்தால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

நான் சிவபெருமான் மாதிரி 3-வது கண்ணை திறந்தால் சந்திரபாபு நாயுடு எரிந்து சாம்பலாகி விடுவார். அவரது தலைவிதி அத்தோடு முடிந்து விடும்.

தெலுங்கானா மக்களை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று சந்திரபாபு நாயுடு நினைக்கிறார். நீங்கள் பணம் கொடுத்து பாருங்கள். உங்களை மக்கள் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு தூக்கி வீசி விடுவார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் காலடியில்தான் சந்திரபாபு நாயுடு இருந்தார். இப்போது வெட்கம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் போய் கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே சந்திரபாபு நாயுடுவை தெலுங்கானா மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும்.

இவ்வாறு சந்திரசேகரராவ் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!