வடக்கு அமைதியாக இருக்கிறதாம் ! குழப்புவோரை வெளிப்படுத்த உளவுத் துறை விசாரணை

வடக்கு அமைதியாகவுள்ளது. வடக்கை குழப்ப எத்தனிப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த உளவுத் துறையூடாக நாம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார்.

வவுனியாவில் ஆவா குழு எனும் பெயரில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அக்குழுவால் விநியோகிக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகியுள்ள நிலையில் இவ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கை குழப்ப நினைப்பவர்களை விரைவில் வெளிப்படுத்துவோம் எனவும் அவர் கூறினார்.

அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவின் தலைமையில் அவ்வமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விஷேட ஊடகவியலளர் சந்திப்பில் கலந்துகொண்டு வடக்கு நிலவரம் குறித்து தெளிவுபடுத்தும் போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தலமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பிரதி அமைச்சர் நலின் பண்டார, அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன,மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதியும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப், போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த மற்றும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் விளக்கமளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ,

வடக்கு அமைதியாகவே உள்ளது. நான் கடந்த ஒரு வருடமும் நான்கு மாதங்களுமாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுகின்றேன். இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போதும் ஒரு வருடம் நான் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றியிருந்தேன். எனவே எனக்கு வடக்கு ஒன்றும் புது இடமல்ல. வடக்கு அமைதியாகவே உள்ளது என்பதை நான் உறுதிப் பட கூறுகின்றேன்.

வடக்கில் அமைதியில்லை என் கூறுவோர் ஆவா குழு தொடர்பிலான சம்பவங்களை அது தொடர்பில் முன்வைக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் உருவான ஆவா குழுவால் இன்று வரை எந்த கொலைகளும் புரியப்படவில்லை. தெற்கில் உள்ள குழுக்களைப் போன்றே வடக்கில் இந்த ஆவா குழு இயங்குகின்றது. எனினும் தெற்கு குழுக்கள் அளவுக்கு இந்த குழு பயங்கரமானது அல்ல.

வடக்கில் எனது கட்டுப்பாட்டில் 53 பொலிஸ் நிலையங்கள் உள்ளன. எனினும் இந்த ஆவா குழு பிரச்சினை நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே நிலவுகின்றது. யாழ்., கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் அகைய பொலிஸ் பிரிவுகளிலேயே இப்பிரச்சினை உள்ளது. அதிலும் ஆவ அகுழுவுடன் தொடர்புடைய இளைஞர்கள் இனுவில், கொக்குவில் எனும் இரு ஊர்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது ஆவ அகுழு பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. ஆவா குழுவை விட்டு சென்றவர்களால் அந்த குழு உடைந்துவிடும் என்பதை மையப்படுத்தி, அதிலிருந்து விலகியவர்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகின்றார்கள்.

ஆவா குழு தொடர்பில் பொலிஸாராகிய நாம் சட்ட ரீதியாக செயற்பட்டுள்ளோம். செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். எமக்கு உள்ள சட்ட ரீதியிலான எல்லைகளுக்கு அப்பால் சென்று ஆவா குழு விடயத்தில் செயற்பட நாம் தயாரில்லை. சிலர் நாம் அந்த எல்லையை மீறி செயற்படும் வரை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் ஏனைய மாகாணங்களை விட வடக்கே மிக அமைதியாக உள்ளது. இவ்வருடத்தில் வடக்கில் இரு கொலை சம்பவங்களே பதிவாகியுள்ளன. அதுவும் தனிப்பட்ட விவகாரங்களை மையபப்டுத்தியவையாகும். அவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் நாம் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளோம்.

ஆவா குழு இன்று ஒரு மிகப் பெரிய பயங்கரமான குழு என்ற மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் அங்கத்துவம் வகிப்போரைப் பாருங்கள்..( ஆவா குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றினை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர்களுக்கு காண்பித்தார்)

இவர்கள் இளைஞர்கள். இவர்கள் எண்ணுமளவுக்கு பெரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இல்லை.சிறிய சிறிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களை நாம் கைது செய்துள்ளோம்.

இந்த வருடத்தில் ஆவ அகுழு தொடர்புபட்ட 21 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. யாழ். பொலிஸ் பிரிவில் 10 சம்பவங்களும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் 2 சம்பவங்களும், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 3 சம்பவங்களும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 6 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் யாழ். சம்பவங்கள் குறித்து 19 பேரும் கோப்பாய் சம்பவங்கள் தொடர்பில் 6 பேரும் சுன்னாகம் சம்பவங்கள் குறித்து 8 பேரும் மானிப்பாய் சம்பவங்கள் தொடர்பில் 24 பேருமாக மொத்தமாக 57 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் மானிப்பாய் சம்பவங்கள் தொடர்பில் கைதானோரில் 8 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் உள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் அனைவரும் பிணையில் உள்ளனர்.

ஆவா குழுவை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத புலனயவுப் பிரிவு, உளவுத் துறை, விஷேட நடவடிக்கைப் பிரிவுகளின் உதவி ஒத்தாசைகளும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உதவியும் இந்த விவகாரத்தில் பெறப்பட்டுள்ளன என்றார்.

இதன் போது ஊடகவியலாளர்கள் வடக்கு இளைஞர்கள் இவ்வாறான குழுக்களில் செயற்பட காரணம் என்ன என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவிடம் கேள்வி எழுப்பினர். அத்துடன் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தால் இரு நாட்களில் ஆவா குழுவை அடக்குவதாக கூருவதன் ஊடாக பொலிஸார் அறிந்திராத ஏதேனும் ஒன்றினை இராணுவம் அறிந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ,

வடக்கில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இன்மை, யுத்த காலத்தில் வெளிநாடு சென்றோர் அனுப்பும் பணத்தில் இளைஞர்கள் வாழ்வது, தென் இந்திய சினிமா படங்களின் தாக்கம் போன்றவையே ஆவா போன்ற குழுக்களின் தோற்றத்துக்கு காரணம் என்றார்.

அத்துடன் யாழ். இராணுவ கட்டளைத் தளபதியின் கருத்து குறித்து பதிலளிக்கும் போது, வடக்கில் மட்டும் எனக்கு கீழ் 6000 பொலிஸார் உள்ளனர். ஆவா பிரச்சினை 4 பொலிஸ் பிரிவுகளில் உள்ளது. 6000 பொலிசாரையும் வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவது என்பது எம்மால் மிக இலகுவாக முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கை.

ஆவா குழு குறித்த பிரச்சினை தீர்க்க முடியுமான மிகச் சிறிய பிரச்சினை. ஆவா குழுவால் எந்த சிக்கலும் தேசிய பாதுகப்புக்கோ, வடக்கின் பாதுகாப்புக்கோ இல்லை என்றார்.

இதன்போது 4 பொலிஸ் நிலைய பிரிவுகளிலேயே ஆவா குழுவின் கைவரிசை உள்ளதாக கூறப்பட்ட போதும் வவுனியாவிலும் நேற்று முன்தினம் துண்டுப்பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளனவே என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, ஆம், வவுனியாவின் சில பகுதிகளில் ஆவா குழு எனக் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் சில விநியோகிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வினியோகிக்கப்பட்ட கையேடுகளில் 11 கையேடுகள் எம்மால் பல பகுதிகளில் இருந்தும் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.

அந்த விசாரணைகளில் ஆவா குழு எனும் பெயரில் விநியோகிக்கப்பட்ட அந்த கையேடுகளுக்கும் ஆவா குழுவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. இந் நிலையில் யாரின் தேவைக்காக இந்த கையேடுகள் விநியோகிக்கப்பட்டன. அமைதியாக இருக்கும் வடக்கை யார் குழப்ப நினைக்கின்றார். அதன் பின்னனியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய நாம் உளவுத் துறை ஊடாக விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். அவ்விசாரணைகளில் இதன் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்துவோம் என்றார்.

இதன்போது ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்குவதைவிட பொலிஸ் விஷேட அதிரடிப் படையால் அவற்றை செய்ய முடியாதா என பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லதீபிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், வடக்கில் 8 அதிரடிப் படை முகாம்கள் உள்ளன. அதில் யாழ். மாவட்டத்தில் இரண்டு முகாம்கள் உள்ளன. இவை இரண்டு ஊடாகவும் யாழ்., சாவகச்சேரி ஆகிய பொலிஸ் பிராந்தியங்களில் பொலிசார் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கப்படுகின்றன.

உண்மையில் வடக்கில் இளைஞர்கள் இவ்வாறான குழுக்களில் செயற்பட காரணம் என்ன என நாம் ஆராயும் போது, அதிக மது அருந்தும் பழக்கமும் முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆவா குழுவால் பாதுகபபுக்கு எந்த சிக்கலும் இல்லை. எனினும் நாம் தொடர்ந்து விழிப்புடனேயே உள்ளோம். என்றார்.

இதன்போது இது குறித்து பேசிய சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார, ஆவா குழுவைப் போன்றே தெற்கிலும் குழுக்கள் செயற்படுகின்றன. அவற்றுக்கு பெயர் இல்லை. எனினும் பயங்கரமாக அவர்கள் செயற்படுகின்றார்கள். நாம் ஆவா குழுவை அனுமதிக்கவில்லை. எனினும் அவர்களைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!