சுனாமி தாக்குதல் பலி எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கலாம்

இந்தோனேஷியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1571ஐ தாண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 29ஆம் திகதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டடங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் இராணுவமும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் என பல கட்டடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!