ரெயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை – அதிர்ச்சியில் மனைவியும் அதே இடத்தில் உயிரை மாய்த்தார்

திருப்பதி அருகே ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர் (வயது 62), நேற்று காலை ரேணிகுண்டா அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார். அவரது உடலை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை குறித்து விசாரித்து வந்தனர். தற்கொலை செய்த இடத்தில் இருந்து நீதிபதி சுதாகர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. இதுபற்றிய முழு விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, சுதாகர் மரணம் குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி வரலட்சுமி (வயது 58) கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். கணவரின் உடலை வாங்குவதற்கு வீட்டில் உள்ளவர்கள் சென்றபோது, கணவர் தற்கொலை செய்த அதே இடத்திற்கு நேற்று இரவு சென்ற வரலட்சுமி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.

இருவரின் தற்கொலை குறித்தும் ரேணிகுண்டா ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரும் மனைவியும் அடுத்தடுத்து ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!