ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது – கமல்ஹாசன் பேட்டி

ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

டெல்லியில் ஒரு ஆங்கில பத்திரிகை சார்பில் தலைமைக்கான கருத்தரங்கு நடந்தது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது இலக்குகள் குறித்து பதில் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். கருத்தரங்கில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உண்டா?

பதில்:- அரசியலில் யாருமே தீண்டத்தகாதவர் இல்லை. எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் பா.ஜ.க. வுடனும் கூட்டணி சேரலாம். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை மரபணு மூலக்கூறு எண்ணங்களையும் மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கே:- சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நீங்கள் வரவேற்றது ஏன்?

ப:- அது எனது சொந்தக்கருத்து மட்டுமே. கட்சியின் கருத்தோ கொள்கையோ அல்ல.

கே:- ராகுல் காந்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப:- நாட்டு மக்களின் சாத்தியப்படும் நபராக அவர் திகழ்கிறார். என்னை எப்படி தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வாய்ப்புள்ளவராக பார்க்கிறீர்களோ அதேபோல் நானும் அவரை நாட்டின் சாத்தியமாக பார்க்கிறேன். அவர் பிரதமர் ஆவதற்கான தகுதியும் வாய்ப்பும் உள்ளது.

கே :- காவி அரசியல் பற்றி?

ப :- அரசியல் என்பதே மக்களுக்கானது. அவர்கள் கடைபிடிக்கும் மதத்துக்கு உரிய மதிப்பையும் மரியாதையும் கொடுத்து கொடியில் இடம் கொடுத்திருக்கிறோம். மூன்று நிறங்கள் கொண்ட கொடியில் மூன்றுக்குமே சமமான முக்கியத்துவம் உண்டு. எந்த ஒரு நிறமும் மற்றவர்களை ஆக்கிரமித்துக்கொள்வதை நான் விரும்பமாட்டேன். 70 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொடி அது.

கே:- கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பீர்களா?

ப:- எங்களுடைய அடிப்படை கொள்கைகள் எல்லோருக்கும் தெரியும். மக்கள் நீதி மய்யம் என்பது எங்கள் கொள்கைகள் தான். எங்கள் கொள்கைகளை வைத்து மக்கள் எங்களை சுத்தமானவர்களாக, நேர்மையானவர்களாக பார்க்கிறார்கள்.

ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று நம்புகிறார்கள். கறை படிந்த ஊழல் கட்சிகளுடன் நாங்கள் கைகுலுக்கினால் அந்த நம்பிக்கையை சிதைப்பது போல் ஆகிவிடும். எனவே கூட்டணி அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஊழல்வாதிகள் யாருடனும் நாங்கள் கூட்டாளியாக இருக்க மாட்டோம்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!