பொது எதிரணியுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சிறிசேன முயற்சி ? வெளியாகின்றன புதிய தகவல்கள்

நவம்பரில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை தோற்கடித்த பின்னர் இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2020 ற்கு பின்னரும் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார் என இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை மீண்டும் பொதுவேட்பாளராக நியமிப்பதற்கு ஐக்கியதேசிய கட்சி மறுத்துள்ளதை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப்போவதில்லை தனது வேட்பாளரையே நிறுத்தப்போவதாக திட்டவட்டமாக ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக சிறிசேன ஐக்கியதேசிய கட்சியையும் அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்து வருவதால் கட்சியின் ஆதரவாளர்களை அவரிற்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது எனவும் கட்சி தெரிவித்துள்ளது என குறிப்பிட்ட இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் இந்த நிலைப்பாட்டினால் சீற்றமடைந்துள்ள ஜனாதிபதி பொது எதிரணியை நாடியுள்ளார் என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையிலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு உதவியுள்ளனர்

2020 இல் கூட்டு எதிரணியின் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கான முயற்சியின் ஆரம்பமாக இடைக்கால அரசாங்கமொன்று அமையவேண்டும் என சிறிசேன கருதுகின்றார் என ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது

ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான காபந்து அரசாங்கத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி பிரதமராக பதவி வகிக்க முடியும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன எனகுறிப்பிட்டுள்ள இணையத்தளம் அடுத்த ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரும் இந்த ஏற்பாடு தொடரலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறிசேனவிற்கு ஆதரவளிக்கலாம்,நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேன மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பார் எனவும் சிறிசேனவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

பொது எதிரணி ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு தெளிவான பதிலை வழங்கவில்லை எனவும் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!