ஜெனிவாவில் இலங்கைக்கு சர்வதேசம் முழு ஆதரவு வழங்கும்! – திலக் மாரப்பன

ஜெனீவா தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது எனவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வில், சர்வதேச சமூகம் இலங்கையை முழுமையாக ஆதரிக்கும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் குறித்த அலுவகத்தை ஏற்படுத்தியது,நஸ்ட ஈடு தொடர்பான சட்ட மூலம் மற்றும் புதிய பயங்கரவாத தடை சட்டம் குறித்த சட்ட மூலம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது போன்ற நடவடிக்கைகள் இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதை நோக்கி எடுத்துள்ள சரியான நடவடிக்கைகள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகளுடன் நாங்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் அவர்கள் எங்களை பாராட்டியுள்ளனர்.

இந்த அரசாங்கம் சட்டத்தின் ஆட்சி நீதித்துறையின் ஊடகங்களின் சுதந்திரம் போன்றவற்றை எப்படி மீள ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் பார்க்க முடியும்.

இன்று நாட்டில் எவரும் தாங்கள் கடத்தப்படுவோம் என அஞ்சுவதில்லை. காணாமல்போகச் செய்யப்படுவோம் என அச்சப்படுவதில்லை. தேசிய அரசாங்கத்தின் உருவாக்கத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றத்தினை பல இராஜதந்திரிகள் என்னிடம் புகழ்ந்துள்ளனர்.

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை பாராட்டியுள்ள அவர்கள் ஏனைய நாடுகள் இந்த உதாரணத்தை பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளனர். நாங்கள் எங்கள் தனித்தன்மையையோ தனிநபர் ஒருவரையோ விட்டுக்கொடுக்காமல் இதனை சாதித்துள்ளோம். இலங்கை மீது சர்வதேச அழுத்தம் என்று எதுவும் இல்லை.

எங்கள் மக்களின் நன்மைக்காக நாங்கள் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இந்த விடயத்தில் எங்கு எல்லைக்கோட்டை வரைய வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். 2019 மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின் சர்வதேச சமூகம் முழுமையாக ஆதரிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!