இந்தியா குறித்த முடிவு விரைவில் – ட்ரம்ப்

இந்தியா குறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும். நீங்கள் நினைப்பதற்கு முன்னதாகவே இந்தியா குறித்த முடிவை அறிவிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவுடன் எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிடவில்லை என்றால், ரஷ்யாவிடம் இராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இந்தியா இணைத்துக் கொள்ளப்பட்டு, பொருளாதார தடை விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 05 ஆம் திகதி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த விளாடிமிர் புட்டின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விண்வெளி துறை, அணுசக்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறை சம்பந்தமான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார்.

மேலும் எஸ் 400 ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா ரஷ்யாவுடன் எஸ் 400 ரக ஏவுகணைகளையும் வாங்கவுள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாகும்.

இது இவ்வாறிருக்க டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவுடன் ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டால் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந் நிலையிலேயே அமெரிக்காவின் மிரட்டலை பொருட்படுத்தாமல் ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்தது இந்தியா. இதனைத் தொடர்ந்து இந்திய – அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக நேற்று புதன்கிழமை வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்திப்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,

“இந்தியா குறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும். நீங்கள் நினைப்பதற்கு முன்னதாகவே இந்தியா குறித்த முடிவை அறிவிப்பேன்” என்று கூறினார்

இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, இந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் என்றார்.