பயங்கர சூறாவளி காற்றுடன் அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி

அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறி உள்ளது.
:
அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர்.

அது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது.

முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.

அத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

மழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.

லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறாவளி காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.

கடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.

புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறி உள்ளது.

மின்சாரம் இல்லாததால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!