எனது அனுமதியில்லாமல் எப்படி என் மனைவிக்கு குடும்பகட்டுப்பாடு ஆப்ரேசன் செய்யலாம்: – கொந்தளிக்கும் கணவன்

கணவன், மனைவிக்குத் தெரியாமல், அவர்கள் சம்பந்தமின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்யபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாச்சாரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(32). இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஸ்வினியை கடந்த ஒன்றாம் தேதி பிரசவத்திற்காக ராஜேஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அன்று மாலையே அறுவை சிகிச்சை மூலம் அஸ்வினுக்கு, இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டு தினங்கள் கழித்து செவிலியர்கள் அஸ்வினியை வேகமாக நடக்க வேண்டாம் உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு உள்ளது என்று கூறியதால் அஸ்வினி

இதனைத் தொடர்ந்து எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யலாம் என அரசு மருத்துவமனை நிர்வாகத்தை அவர்கள் அணுகிய போது, “அனுமதி பெற்று தான் செய்தோம்” என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஸ்வினி, “குழந்தை பிறக்க அறுவை சிகிச்சைக்கு மட்டுமே தான் கையெழுத்து வாங்கினார்கள். குடும்ப கட்டுப்பாடு குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. நான் எதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை” என்றார். கடந்த நான்கு தினங்களாக மருத்துவமனை வளாகத்தில் இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கணவர் ராஜேஷ் கூறியதாவது, “நான் 1-ம் தேதி எனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணிக்குச் சென்றுவிட்டேன். அன்று மாலை 6 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது, அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்திருந்தது. பின்னர், 4 நாட்களுக்கு கழித்து, செவிலியர்கள் மூலம் எனது மனைவிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக என் மனைவி என்னிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான், இது குறித்து தலைமை மருத்துவரிடம் கேட்டேன். அவர் வார்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர், `தவறு நடந்துவிட்டது கொஞ்சம் பொறுங்கள்’ என எங்களை சமாதானப்படுத்தினார். ஆனால் நாட்கள் தான் சென்றதே தவிர எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் நான் வேறு வழியில்லாமல், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன். எனது அனுமதியில்லாமல் எப்படி என் மனைவிக்கு குடும்பகட்டுப்பாடு ஆப்ரேசன் செய்யலாம். இதற்கு நியாயம் கிடைக்கும் வரை நான் மருத்துவமனையில் இருந்து என் மனைவியை அழைத்துச் செல்லப்போவதில்லை” என்று கூறினார். தங்களுக்கே தெரியாமல் தங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ததாக கணவன் மனைவி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!