சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களை தடுத்த 8 பேர் கைது

சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். நிலக்கல்லில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் ஐயப்பப் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டது.

மாறாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்டு அரசு அறிவித்தது. மேலும் சபரிமலைக்கு கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

கேரள அரசின் முடிவை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம், ஐயப்ப சேவா சங்கம் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

கேரள மாநிலம் முழுவதும் நடந்த இப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.

பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகள், தந்திரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டும், கேரள அரசும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினர். இதை ஏற்க தேவசம் போர்டு மறுத்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.

சென்னையில் இருந்து பஞ்சவர்ணம் (வயது 40), என்ற பெண் அவரது கணவர் பழனி (45)யுடன் சபரிமலை செல்லும் பஸ்சில் இருந்தார். அவரை போராட்டக்காரர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சென்னை தம்பதிகளை மீட்டு அழைத்து சென்றனர்.

சென்னை தம்பதியை போல் சில பெண்கள் கருப்பு உடை அணிந்து அந்த வழியாக சென்றனர். அவர்களும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையிலும் தடியடி நடத்தப்பட்டது.

நிலக்கல்லில் நடந்த சம்பவம் பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோரை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.

அதன்படி, நிலக்கல்லில் போராட்டம் நடத்த போடப்பட்டிருந்த பந்தல் போலீசாரால் அகற்றப்பட் டது. மேலும் பெண் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதில், பெண் போலீசாரும் இருந்தனர்.

சபரிமலை விவகாரம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று நடத்திய சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேவசம் போர்டின் கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 19-ந்தேதி இக்கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது மீண்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!