70 வயது நபரை கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: – போலீசில் வினோத புகா

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி, மதுரா, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வீடு, கடைகளுக்குள் கூட்டமாக நுழையும் குரங்குகள் பொருட்களை நாசப்படுத்துவதுடன், திண்பண்டங்களையும் சில வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளையும் தூக்கிச் சென்று விடுவதுண்டு.

இந்நிலையில், இங்குள்ள பக்பட் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது முதியவரை செங்கல் மற்றும் அரைக்கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இங்குள்ள டிக்ரி குராமத்தில் கடந்த 17-ம் தேதி விறகு சேகரிக்க சென்ற எனது சகோதரர் தரம்பால்(70) என்பவரை குரங்குகள் சூழ்ந்துகொண்டு கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். எனவே, குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்தாரர் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், இந்த சம்பவத்தை போலீசார் வேறுவிதமாக விவரிக்கின்றனர். உயரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியல் அருகில் தரம்பால் படுத்து தூங்கியுள்ளார். அதன்மீது குரங்குகள் குதித்ததால் செங்கல் சரிந்து அவர்மீது விழுந்ததில் படுகாயமடைந்த தரம்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!