மியான்மாரில் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு !!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 ஆயிரத்து 500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அந்த நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

ஆங் சான் சூகி-யின் நெருங்கிய உதவியாளராக இருந்து, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற டின் க்யாவ் (71), உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, கடந்த மாதம் மியான்மாரின் புதிய அதிபராக, அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தீவிர ஆதரவாளர் வின் மியிந்த் (66) பொறுப்பேற்றர். அவர் பொறுப்பேற்று ஒரு மாதத்துக்குள்ளாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மியான்மாரில் ‘தின்கியான்’ என்று அழைக்கப்படும் பௌத்த புத்தாண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மனிதாபிமான அடிப்படையில் 8 ஆயிரத்து 500 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மியான்மார் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளில் 36 பேர் அரசியல் வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள். போதை மருந்து கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டோருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாட்டினர் 50 பேரும் தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!