இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு!!!

லண்டனில் இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி லண்டன் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்திப்பதற்காக டவுனிங் தெருவுக்கு மோடி சென்ற போது அவர் செல்லும் வழியில் திரண்ட இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஷ்மீர், உத்தரபிரதேச கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் இந்தியாவில் சமீபத்தில் நடந்த வன்முறைகளை கண்டித்து இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 இந்தியர்கள் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு இந்திய பெண்கள் அமைப்பினரும் பங்கேற்றனர்.

கொமன்வெல்த் மாநாட்டையொட்டி அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கிய சிலர் கிழித்துள்ளனர். இதனால் அங்கு மோதலும், வன்முறையும் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை படம் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய தொலைக்காட்சி நிருபரை போராட்டக்காரர்கள் தாக்கியுமுள்ளனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனே இந்திய தொலைக்காட்சி நிருபரை ஸ்கொட்லாந்து பொலிஸார் மீட்டதோடு அப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் மூத்த அதிகாரிகளில் ஒருவர் இந்த போராட்டம் குறித்து கூறுகையில்,

“இந்த போராட்டம் மற்றும் தேசியக்கொடி கிழிப்பு சம்பவம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர்களும் வருத்தம் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் என நாங்கள் எச்சரித்து இருந்தோம். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது கிழிக்கப்பட்ட தேசியக்கொடி மாற்றப்பட்டு விட்டது”என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!