சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்என பரவலான கருத்து முன் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய பெண்கள் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார்.

இதற்கிடையே சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!