ஜரோப்பாவில் எங்குமே காணமுடியாத அளவிற்கு இத்தாலி நாட்டிற் பெருகியுள்ள லஞ்ச ஊழல், அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஆறாயிரம் கோடி யூரோ சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தவறான அரசியற் போக்கிற்கு முன்னைய அரசியற் தலைவர் பெலுஸ்கோனி முழுமையான காரணகர்த்தா எனப்படுகிறது. இது மிகவும் அசெளகரியத்தை தோற்றுவித்துதிருப்பதாக ஜரோப்பிய ஒன்றிய அறிக்கை தெரிவிக்கிறது.
வீதிகள் அமைப்பதற்கும், அரசாங்கக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், வைத்தியசாலை உபகரணங்களை வாங்குவற்குமென அரசாங்கத்தால் பல கோடி யூரோக்கள் வரவு செலவுத் திட்டங்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டும், அப்பணம் சேரவேண்டிய அலுவலகங்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படாமல் அரசியல் வாதிகளினதும், தொழில் அதிபர்களினதும் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் இடம் பெறும் லஞ்ச ஊழல் காரணமாக, ஜரோப்பிய ஒன்றியத்திற்கு வருடமொன்றிற்கு பன்னீராயிரம் கோடி யூரோ நஷ்ரம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. 97 சதவீதமான இத்தாலியப் பிரஜைகள் தம் நாடு லஞ்ச ஊழலால் சீரழிந்து கொண்டிருப்பதை அறிந்திருந்தும் ஏதும் செய்ய முடியாதிருப்பதாக, மக்கள் மத்தியில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்று எடுத்துக்கூறுகிறது.
அரசியல் வாதிகளும், பாதாளக் குழுக்களும் இணைந்து செயல்புரியும் இக்குற்றச் செயலை தடுக்கும் வல்லமை இல்லாத மக்கள் அதனை சகித்துப் போக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டளவில் மட்டும் பாதிக்கு மேற்பட்ட மாகாண அரசியல் வாதிகளுக்கெதிராகவும் 30 பாராளுமன்ற அங்கத்தவருக்கெதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இருந்தும் இத்தாலியில் தொடர்ந்து ஊழல் இடம் பெறுகிறது. அங்குள்ள பத்திரிகைகள் இது பற்றி எதுவும் சொல்லாமல் மெளனம் சாதிக்கின்றன.
விலை உயர்ந்த வாகனங்கள், வீடுகள், அழகிய பெண்கள், ஆடம்பரமான களியாட்டங்கள் நிறைந்த கொண்டாட்டங்களென அரசாங்கத்தால் தரப்படும் சலுகைகள் பத்திரிக்கையாளரின் மெளனத்திற்குக் காரணமாகிறதென சுட்டிக்காட்டப் படுகிறது. பெலுஸ்கோனிக்குப்பின் இத்தாலியை ஆள வந்தவரும் முன்னவரின் பாதையைப் பின்பற்றும் நிலை இத்தாலி அரசியலில் நிகழ்வதை ஜரோப்பிய ஒன்றியம் இன்னும் வேடிக்கை பார்க்கிறது.
















