நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சிறிலங்கா அதிபரிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

சிறிலங்காவின் நிலைமைகள் திடீரெனச் சீரழிந்துள்ளமை, அமைதியின்மைக்கும், உறுதியற்ற நிலைக்கும் வழிவகுக்கும் என்பதால், நாடாளுமன்றத்தை உடனடியாக மீளக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

நேற்று ஏனைய அனைத்துலக நாடுகளின் தூதுவர்களுடன், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர், இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் ஒரு தீர்வு விரைவாகக் காணப்பட வேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பை சிறிலங்கா அதிபரிடம், ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“இந்த நிலையில், நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கு சிறிலங்கா அதிபர் இடமளிப்பது முக்கியம். அப்போது தான், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். தமது கடமைகளை நிறைவேற்ற முடியும்.

பதற்றமான, நிச்சயமற்ற தற்போதைய சூழ்நிலையில், வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் செயற்படுவது மிகவும் முக்கியம்.

சிறிலங்கா மக்களின், முழுமையான நன்மைக்காக நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றிற்கு சாதகமான பாதையை சிறிலங்கா முன்னெடுப்பதை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது.” என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!