மகிந்த ராஜபக்சவையே சந்தித்தார் சம்பந்தன் – சிறிலங்கா பிரதமரை அல்ல

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் பங்கேற்றிருந்தார். எனினும், இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

அதேவேளை, இந்தச் சந்திப்பின் பின்னர் பல்வேறு ஊகங்களும் வெளியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

வேறு எந்தவொரு அடிப்படையிலும், இரா. சம்பந்தன் இந்தச் சந்திப்பில் பங்குபெறவில்லை.

மேலும் இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக, எதுவும் கலந்துரையாடப்படவில்லை.

இது தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா. சம்பந்தனுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தச் சந்திப்புத் தொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“நீங்கள் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்று, மகிந்த ராஜபக்சவிடம் இரா.சம்பந்தன் கூறினார்.

பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிக்கும் அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்பதையும் அவர், சுட்டிக்காட்டியிருந்தார்.

பெரும்பான்மை இருக்குமாயின் அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பது சட்டத்திற்கு முரணானது.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மகிந்த ராஜபக்சவும் ஆதரவளிக்க வேண்டும். அதன்பின்னர் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம்“ என்றும், இரா.சம்பந்தன் கூறியதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!