சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்

கடந்த செப்ரெம்பர் மாதம் மாலைதீவில் தேர்தல் இடம்பெற்றதைத் தொடர்ந்து நிலவிவந்த அரசியல் முறுகல்நிலையானது தற்போது ஒரளவு தணிந்து வரும் நிலையில், இந்தியாவின் பிறிதொரு அயல்நாடான சிறிலங்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட அரசியல் முறுகல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

இந்தியாவின் மூலோபாயப் போட்டியாளரான சீனாவின் ஆதரவாளரான சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையானது இந்தியாவைச் சூழவுள்ள பிராந்தியத்தின் பூகோளஅரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

குறிப்பாக இப்பிராந்தியத்தில் சீனாவானது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டுவருவதானது அச்சுறுத்தலாக எழுந்துள்ள நிலையில் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மாற்றமானது இதனை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளில் சீனா தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கு முயற்சித்து வரும் நிலையில், சிறிய நாடுகள் இந்தியாவின் கவலைகளை கவனத்தில் எடுக்காமையை உறுதிப்படுத்துவதற்கு சீனா தற்போது தனது இருப்பை பலப்படுத்தி வருவதானது இந்தியாவிற்கு எழுந்துள்ள இராஜதந்திர சவாலாகக் காணப்படுவதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வல் சிபல் தெரிவித்துள்ளார்.

2015இல் சிறிலங்காவில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சியமைத்துக் கொண்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திடீரென நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமையானது அரசியல் குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் பிரதமர் என சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அங்கீகரித்தமையானது சிறிலங்கா அரசியலின் பிறிதொரு திருப்பமாக உள்ளதாக கடந்த ஞாயிறன்று AFP அறிக்கை வெளியிட்டிருந்தது.

சிறிலங்காவில் அரசியல் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள அதேவேளையில், மாலைதீவுடன் புதியதொரு உறவைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இந்தியா எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன் நவம்பர் 11 இல் மாலைதீவில் நடைபெறவுள்ள புதிய அதிபரான இப்ராகிம் மொகமட் சாலிக்கின் பதவிப் பிரமாண நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பங்கேற்குமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவிற்கு ஆதரவான மாலைதீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யமீன், சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தின் கீழான பல்வேறு திட்டங்களில் கைச்சாத்திட்டுள்ளார். சீனாவின் இந்த நகர்வை இந்தியா எதிர்த்திருந்ததுடன், சிறிய நாடுகளுக்கு சீனா கடன் வழங்கும்போது இந்த விடயத்தில் சீனா வெளிப்படைத்தன்மையற்ற வகையில் நடந்து கொள்வதாகவும் இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.

அத்துடன் பாகிஸ்தான் -காஸ்மீர் ஊடாக மேற்கொள்ளப்படும் சீனாவின் இத்திட்டத்தை இந்தியா எதிர்த்துள்ளதுடன் இது இறையாண்மைப் பிரச்சினைகளை உண்டுபண்ணுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.

கடந்த வெள்ளியன்று சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் இது தொடர்பில் எவ்வித அறிக்கையையும் வெளியிடாது அமைதி காத்த இந்தியா கடந்த ஞாயிறன்று மிகக் கவனமான வார்தைக் கையாடல்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

‘சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை இந்தியா மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகிறது. சிறிலங்காவானது ஜனநாயக மற்றும் மிகவும் நெருக்கமான நட்பார்ந்த அயல்நாடு என்ற வகையில், இது தனது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியல் சாசன நடைமுறைகளை மதிக்கும் என நாம் நம்புகிறோம்.

நாங்கள் நட்பார்ந்த சிறிலங்கா மக்களுக்கு எமது அபிவிருத்தி சார் உதவிகளை மேலும் விரிவாக்கி அவற்றைத் தொடர்ந்தும் வழங்குவோம்’ என இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையானது இந்தியாவின் அயல் நாட்டில் மேலும் சிக்கல்நிலையைத் தோற்றுவிக்கும். மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில் அவர் சீனாவிற்குச் சார்பாக நடந்து கொள்வாரெனில் அது எமக்கு கவலையை அளிக்கும்’ என இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் சிபல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைக் கையாளுதல் என்பது இந்தியாவிற்கான பலமான சவாலாக உள்ளதாகவும், பாகிஸ்தான் இந்தியாவை எதிர்ப்பதற்காக பயங்கரவாதம் என்கின்ற விடயத்தை தனது நாட்டின் கோட்பாடாகப் பிரயோகிப்பதாகவும் பாகிஸ்தான் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு நேபாளத்தில் இடம்பெற்ற தேர்தலில் கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுக் கொண்டது. இந்தியாவிடம் உதவிகளைப் பெறுவதைக் குறைப்பதில் புதிய பிரதமர் ஒளி கவனம் செலுத்தியிருப்பதுடன் சீனாவுடன் பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பேணுவதிலும் இவர் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவுடன் நட்புறவைப் பேணிய பூட்டானின் முன்னாள் பிரதமர் ரிசெறிங்க் ரொப்கேயிடமிருந்து தற்போது ஆட்சியைப் பெற்றுக்கொண்டுள்ள பூட்டானின் புதிய பிரதமர் லொற்றே ரிசெறிங் அரசியலிற்கு புதியவராகக் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதே.

ஆங்கிலத்தில் -Elizabeth Roche
வழிமூலம் – livemint
மொழியாக்கம் – நித்தியபாரதி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!