பிரதமர் விடயத்தில் நாடகமாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்

நாட்டின் பிரதமர் தெரிவு விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்சவை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தேடிச் சென்று சந்தித்து நிபந்தனைகளை முன்வைக்க, மஹிந்தவை பிரதமராக தாங்கள் ஏற்றுக் கொளள்வில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே சந்தித்தோம் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் அறிக்கை விடுவது நாடகத்தின் ஒரு பகுதியே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் மஹிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமர் என்பதை ஏற்றுக் கொண்டே அவர் வீடு சென்று சந்தித்துள்ளார். தனது எதிர்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கும், உபகுழுக்களின் தலைவர் பதவியினை பாதுகாத்துக் கொள்வதற்கும், ஏனைய சலுகைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவசரமாக சம்மந்தன் மஹிந்தவை சந்தித்தார் என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.

இதுமட்டுமல்லாமல் கூட்டமைப்பின் எஐமான்களும் மஹிந்தவை சந்தித்தமை தொடர்பில் இரா.சம்மந்தனை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர்.

வல்லரசு நாடுகள் தமக்கு எச்சரிக்கை செய்துள்ள நிலையில்தான் தமது பிழையினை திருத்தி தமிழ் மக்களுக்கு காண்பிப்பதற்காகவே அவசரமான ஒரு அறிக்கையினை கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையினை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ளார்.

குறிப்பாக “எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன், பாராளுமன்று உறுப்பினர் மஹிந்த ராஜபச்சவின் அழைப்பின் பெயரில் அவருடைய வீட்டில் சந்தித்தார”; என்று அறிக்கையில் கூறுகின்றார்.

இந்த நாட்டின் தகுதி நிலை (புரோட்டகோல்) உள்ளது. அந்த வகையில் வெறும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எதிர் கட்சித் தலைவர் அவர் வீடு தேடிச் சென்று போய் சந்திப்பது என்பது எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்.

இந்த அறிவிப்பின் ஊடாக கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் செல்லுகின்றார்கள்.

மஹிந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற கோணத்தில் கூட்டமைப்பு இன்றும் பார்க்கின்றது என்றால் மஹிந்தவை ஏன் தேடிச் சென்று கூட்டமைப்பு சந்திக்க வேண்டும்.

அந்த சந்திப்பில் மஹிந்தவிடத்தில் ஏன் நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்.

சந்திப்பை நடத்தி, அதில் நிபந்தனைகளையும் விதித்த கூட்டமைப்பு ஏன் இன்று, மஹிந்த பிரதமர் என்பதை தாங்கள் ஏற்கவில்லை என்பதை செல்ல வேண்டும்.

அவ்வாறு ஏன் சொல்கிறார்கள் என்றால் மஹிந்தவை அங்கிகரிக்க கூடாது, நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும், மஹிந்த பிரதமர் இல்லை என்ற அடிப்படையில்தான் நீங்கள் பேச வேண்டும் என்று கூட்டமைப்பின் எயமான்களான சர்வதேச வல்லரசுகள் எச்சரிக்கை செய்ததினாலேயே சந்திப்பின் பின் கூட்டமைப்பு மாறி பேசுகின்றது.

மஹிந்தவுடன் சம்மந்தன் சந்திப்பினை நடத்தியது தமிழ் மக்களின் நலன்களை கருதியது இல்லை. தமது நலன்களையும், எயமான்கின் வழிநடத்தல்களையும் கருத்தில் கொண்டே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மேலும்இச் சந்திப்பு தொடர்பில் சர்வதேச வல்லரவுகள் கூட்டமைப்பை கடுமையாக எச்சரித்திருக்கின்ற நிலையிலையே அவர்கள் இன்றைக்கு முன்னுக்குபின் முரணான கருத்தை வெளியிட்டு தப்பித்துக் கொள்ள முனைகின்றதாவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!