சீனாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி – விபத்துக்கான காரணம் தெரிந்தது

சீனாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.

சீனாவின் வான்ஜோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு யாங்ட்சே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான பேருந்து புறப்பட்டு வந்த இடத்தில் இருந்து விபத்து ஏற்பட்ட பகுதி வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும், பேருந்து தாறுமாறாக ஓடியபோது அருகில் சென்ற ஒரு வாகனத்தின் டேஷ்போர்டு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், பேருந்து தவறான பாதையில் சென்றது மட்டும் தெரியவந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில், ஆற்றில் மூழ்கிய பேருந்தில் இருந்த கேமரா பதிவு நீர்மூழ்கி வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தது விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவந்தது.

10 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், பேருந்து டிரைவருடன் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தன் செல்போனால் தாக்குவதும், பதிலுக்கு டிரைவர் தனது வலது கையால் தாக்குவதும், பேருந்து தாறுமாறாக ஓடுவதைப் பார்த்த பயணிகள் கத்தி கூச்சலிடுவதும் பதிவாகி உள்ளது. பேருந்தில் பயணி ஒருவர் டிரைவரை தாக்கியதால் விபத்துக்குள்ளாகி, 15 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!