தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி

சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தென்னாசியப் பிராந்தியத்தின் பூகோள-மூலோபாய போட்டியில், முக்கிய பங்குதாரராகக் கருதப்படும் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பநிலையை, இவ்விரு நாடுகளும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திடீரென பிரதமராக மகிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிறிலங்காவின் அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

பிரதமர் பதவியிலிருந்து தான் நீக்கப்படுவதற்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவு தேவை எனவும் இதனை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்றில் தனது கட்சி அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள நிலையில் தன்னை பதவியிலிருந்து விலக்கியமை சட்டத்திற்கு முரணானது எனவும் இதனால் தன்னால் சிறிலங்கா அதிபரின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

கடந்த 30ஆம் நாள், ரணில் விக்கிரமசிங்கவின் வதிவிடமான அலரி மாளிகைக்கு முன் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

சிறிசேன தனது வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் இவர் நிறைவேற்று அதிகாரத்தை தனது கையில் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற அதிகாரத்தை ஓரங்கட்டிவிட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக ‘ரொய்ட்டர்“ ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையானது, கடந்த சில ஆண்டுகளாக அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நிலவிய அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்தமையை உறுதிப்படுத்துகிறது.

சிறிலங்காவில் தற்போது நிலவி வரும் அரசியல் பிரச்சினையானது சுமூகமாக மாறும் போது எந்தக் கட்சி இங்கு ஆட்சியமைத்துக் கொள்ளும் என்பது தெளிவற்றதாகும். சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் காரணமாக இங்கு தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பநிலையானது பிராந்திய அதிகாரத்துவ நாடுகளான இந்தியா மற்றும் சீனாவால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.

‘சிறிலங்காவின் அண்மைய அரசியல் மாற்றங்கள் தொடர்பாக இந்தியா மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகிறது. சிறிலங்கா தனது நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியல் சீர்திருத்தத்தை பின்பற்றும் என நம்புகிறோம்’ என இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்தியாவானது சிறிலங்காவில் தெளிவான அரசியல் சூழல் வரும் வரை காத்திருக்கும். தனது அயல்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து கொள்வதில்லை என்கின்ற கோட்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. அயல்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து இந்தியா பணியாற்றும்’ என சிறிலங்கா வல்லுநரும் அவதானிப்பு ஆய்வு மையத்தின் சென்னைப் பிரிவின் இயக்குநருமான சத்திய மூர்த்தி சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவின் தற்போதைய சூழல் வேறுபட்டதாகக் காணப்படுவதால் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என இந்தியா கருதுவதாகவும் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவின் ஆதரவாளராகக் கருதப்படும் மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டபோது இவரை வாழ்த்திய ஒரு சில நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.

மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் சீனப் பிரதமரின் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதற்காக சீனாவின் தூதுவர் செங் ஷியுவான், மகிந்த ராஜபக்சவை நேரடியாகச் சந்தித்திருந்தார்.

சிறிலங்காவானது இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பூகோள-மூலோபாயப் போட்டியில் மிக முக்கிய நாடாகக் காணப்படுகிறது. இந்தியாவானது சிறிலங்காவுடன் மிக நீண்ட காலமாக அரசியல், கலாசாரம், பொருளாதாரம் மற்றும் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களிலும் இந்தியா தலையீடு செய்துள்ளது. குறிப்பாக 1987ல் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக இந்திய அரசாங்கத்தால் இந்தியா இராணுவத்தினர் சிறிலங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அண்மைய ஆண்டுகளில் சிறிலங்காவில் சீனா தனது இருப்பை பலப்படுத்தி வருகிறது. 2005-2015 வரை மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராகப் பதவி வகித்த போது சிறிலங்காவுடனான தனது நல்லுறவை சீனா வலுப்படுத்திக் கொண்டது. சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, சீனாவினால் சிறிலங்காவிற்கு இராணுவ உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்கள் வழங்கப்பட்டன.

உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னர், அக்காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்காக அனைத்துலக சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு சீனா தடையாக இருந்தது. இதன்மூலம் சீனாவிற்கும் அப்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் இடையில் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிலங்காவின் கட்டுமானத் திட்டங்களுக்காக சீனாவால் பல பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டன.

2007ல், ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கட்டுவதற்கான உடன்படிக்கையானது மகிந்த ராஜபக்சவினால் சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டது. கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் சீனாவிற்கு முதலீட்டு வலயத்தையும் ராஜபக்ச வழங்கியிருந்தார்.

கொழும்புத் துறைமுகத்தின் தென் கொள்கலன் முனையத்தை நிர்மாணித்து அதனை நிர்வகிப்பதற்கான அனுமதியானது 2010ல் சிறிலங்கா அரசாங்கத்தால் சீனாவிடம் கையளிக்கப்பட்டது. 2013ல், 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கான ஒப்பந்தம் சீனாவினால் கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டமானது சீனா தனது பட்டுப்பாதைத் திட்டத்தை மேற்கொள்ளும் நோக்குடன் 2016ல் ஆரம்பிக்கப்பட்டது.

2013 நவம்பரில் 272 மில்லியன் டொலர் பெறுமதியான தொடருந்துப் பாதைத் திட்டமானது சீனாவால் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறான திட்டங்களை சிறிலங்காவில் சீனா முன்னெடுத்த போது, இது தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்தது. 2014ல் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றபோது இது இந்தியாவிற்கு எச்சரிக்கையை எழுப்பியது.

சிறிலங்காவில் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு அதிகரித்தமையானது இந்தியாவிற்கு மேலும் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2015ல் சிறிலங்காவில் இடம்பெற்ற தேர்தலில் எதிர்பாராத வகையில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு, சிறிசேன நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். தனது தேர்தல் தோல்விக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பே காரணம் என ராஜபக்ச பழிசுமத்தியிருந்தார்.

சிறிசேன தனது தேர்தல் பரப்புரையின் போது, சீனாவில் தங்கியிருக்கும் நிலையைக் குறைப்பேன் என வாக்குறுதி வழங்கியிருந்தார். இவர் அதிபராகப் பதவியேற்ற பின்னர், இந்திய சார்புக் கொள்கையைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார். சிறிசேன அரசாங்கம் இந்தியா மற்றும் சீனாவுடன் சமநிலையான உறவைப் பேணிக்கொண்டது.

எனினும் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை அடைப்பதில் சிறிலங்கா பல்வேறு நெருக்கடிக்கு உட்பட்டதால் இதிலிருந்து மீள்வதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15000 ஏக்கர் நிலப்பரப்பையும் 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவிடம் கையளித்தது.

சிறிலங்காவினால் சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் கையளிக்கப்பட்டதன் மூலம் இந்திய மாக்கடலில் சீனா தனது கடற்தளத்தை அமைத்துக் கொள்ளலாம் என்கின்ற அச்சம் இந்தியாவிற்கு ஏற்பட்டது.

சிறிலங்காவின் மிகமோசமான நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிறிசேன அரசாங்கம் சீனாவுடன் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கிறது. இதன் காரணமாக, சிறிசேன ஆட்சிக்கு வந்தவுடன் இடைநிறுத்தப்பட்ட சீனத்திட்டங்கள் மீண்டும் தொடர்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், இந்தியாவால் சிறிலங்காவால் முன்னெடுக்கப்படவிருந்த சில திட்டங்கள் தந்திரோபாய ரீதியாக தடைப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மத்தல விமான நிலையத்தை முகாமை செய்தல், கெரவலப்பிட்டிய இயற்கை எரிவாயுத் திட்டம் போன்ற இந்தியத் திட்டங்களை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன.

‘ விக்கிரமசிங்க இந்திய ஆதரவாளர் என சில ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது. இது பகுதியளவில் உண்மை. எனினும், இது இந்தியாவின் விருப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறதா அல்லது இல்லையா என்பது வேறு விடயம்’ என சத்திய மூர்த்தி கூறுகிறார்.

‘இந்திய ஆதரவுத் திட்டங்கள் இழுபறி நிலையில் உள்ளமைக்கு சிறிசேன மீது விக்கிரமசிங்க குற்றம் சுமத்தலாம். ஆனால் சீனாவின் கடன் சுமையைக் குறைப்பதற்கான அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிக்கும் நடவடிக்கையில் சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் வேகமாகச் செயற்பட்டிருந்தனர்’ என சத்திய மூர்த்தி குறிப்பிட்டார்.

இந்தியாவின் ‘றோ’ அமைப்பு தன்னைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சில நாட்களின் முன்னர் நாடாளுமன்றில் சிறிலங்கா அதிபர் தெரிவித்திருந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலின் போது சிறிசேன இக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

அண்மையில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய முதலீட்டின் மூலமே அபிவிருத்தி செய்ய வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்திய போது, சிறிலங்கா அரசாங்கமே இதனை முன்னெடுக்க வேண்டும் என சிறிசேன வாதிட்டிருந்தார்.

இவ்வாறான சூழலில் ஏற்பட்ட சிறிலங்காவின் அரசியல் முறுகல் நிலையை இந்திய மாக்கடலில் தமது அதிகாரங்களை நிலைநாட்டுவதற்காக போட்டியிடும் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நெருக்கமாக அவதானித்து வருகின்றன.

பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு போன்ற நாடுகள் உட்பட தென்னாசிய நாடுகளில் தமது செல்வாக்கை அதிகரிப்பதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் போட்டி நிலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

வழிமூலம் – DW*
மொழியாக்கம் – நித்தியபாரதி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!