போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும்! – விக்னேஸ்வரன்

இலங்கை தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் போர்க்குற்ற விசாரணைக்கான முன்மொழிவு தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி நிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இன முரண்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களின் மனோநிலையை உலகுக்கு எடுத்தியம்ப வேண்டும். ஒற்றையாட்சி அடிப்படையிலான இலங்கை அரசியல் அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டமைப்பு சார் தடைகளை சர்வதேச சமூகம் இனிமேலாவது புரிந்துகொள்ள வழி வகுக்க வேண்டும்.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமன் என்பதைப் புரிந்து கொண்டு இனிமேலும் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வழி வகுக்க வேண்டும். சர்வதேச சமூகம் தற்போது தமிழர் பிரச்சினைகளைச் சார்பாகப் பார்க்க வேண்டிய காலம் கிட்டியுள்ளது. நாம் எமது கடமைகளைச் சரியாக ஆற்ற முன் வர வேண்டும்.

இது சம்பந்தமாக எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்குமாறு உறுப்புநாடுகளையும் ஏனைய நாடுகளையும் எம் மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கின்றேன்.

இலங்கையில் எவர் ஆட்சியில் உள்ளார்கள் என்று பார்த்து செயற்படாது பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ‘இலங்கை அரசு’ என்ற ரீதியில் போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.

இதன் ஊடாகவே எமது சிங்கள சகோதரர்களுக்கு இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது போன்ற உண்மைகளை எடுத்துச் சொல்ல முடிவதுடன் அதனால் புரிந்துணர்வை ஏற்படுத்தி உண்மையான இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்.

இல்லாதுவிட்டால் குற்றம் இழைத்தவர்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக போலித் தேசியவாதத்தைக் கையில் எடுத்து இன முரண்பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு உட்படுத்துவதற்கே இன்றைய நிலைமைகள் வழிவகுக்கும். எமது மக்கட் தலைவர்கள் விரைந்து செயற்படுவார்களா?” என்றும் கேள்வியெழுப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!