அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை – மார்க் பீல்ட்

பிரித்தானியா, நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் எமிலி தோர்ன்பெரி கடந்த திங்கட்கிழமை எழுப்பியிருந்த கேள்விக்குக் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய எமிலி தோர்ன்பெரி, சிறிலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்சவையா, ரணில் விக்கிரமசிங்கவையா பிரித்தானியா ஏற்றுக் கொள்கிறது என்று கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த மார்க் பீல்ட்,

“சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் மிகவும் கவலையளிக்கின்றன.

நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை

அரசியலமைப்பு மதிக்கப்படுவதையும், அரசியல் மற்றும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன்.

சபாநாயகருடன் கலந்துரையாடி, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, சிறிலங்கா மக்களின் குரலை ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வெளிப்படுத்த வாய்ப்பளிக்குமாறு, கடந்த ஒக்ரோபர் 29ஆம் நாள், சிறிலங்கா அதிபரைக் கோரும் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!