தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி

மனைவி வாலிபருடன் ஓடியதால் தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகளுடன் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45), ஐஸ் வியாபாரி. இவரது மனைவி முருகம்மாள் (36). இவர்களது மகள் தமிழ்செல்வி. இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாரியப்பன் இன்று காலை தனது மகள் தமிழ்செல்வி (12) யுடன் வந்து தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் 2 பேரையும் காப்பாற்றி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையின்போது தீக்குளிக்க முயன்றது ஏன்? என்பது குறித்து மாரியப்பன் கூறியதாவது:-

நான் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறேன். எனது மனைவி முருகம்மாள் மகன் முறையுள்ள 19 வயதுள்ள வாலிபருடன் ஓடிவிட்டார். போகும்போது 13 பவுன் நகைகளையும், ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார். அவர்கள் 2 பேரையும் போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு கள்ளத்தொடர்பு தப்பில்லை என்று தீர்ப்பு கூறி உள்ளது. இந்த தீர்ப்பால் நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனது மனைவியை போலீசார் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக தான் நான் இன்று மகளுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!