மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி

தாம் நியமித்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்றிரவு அவர் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கும் போது, நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக, தேவையான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அமைவாக, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படவில்லை என்றும் அதில் கூறியுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற உறுப்பினர் எனக் கருதும் ஒருவரை, பிரதமராக அதிபர் நியமிக்க முடியும். அதிபரின் கருத்தை கேள்விக்குட்படுத்தவோ பரீட்சிக்கவோ முடியாது.

தற்போதைய சூழ்நிலையை மதிப்பீடு செய்து நாட்டுக்கு மிகவும் பொருத்தமான முடிவை எடுப்பேன். அதற்கு நாடாளுமன்ற நடைமுறைகளோ, பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவையோ இருக்காது.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக சபாநாயகர் அனுப்பி வைத்த ஆவணத்தில் கையெழுத்துக் கூட இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!