மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல்

மகிந்த ராஜபக்சவின் உரையை வாக்கெடுப்புக்கு விட, ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம் மோதலாக மாறியது.

திலும் அமுனுகம காயம்

மோதல்களில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை பிடுங்க முற்பட்ட போது, ஏற்பட்ட மோதலில் காயமடைந்துள்ளார். அவர் சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் முற்றுகை

சபாநாயகரின் ஆசனத்தை மகிந்த தரப்பினர் முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐதேகவினர் சபாநாயகருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்கள் சபாநாயகர் மீது கடதாசிக் குப்பைக் கூடையை வீசியெறிந்துள்ளனர். சபாநாயகரைத் தாக்கவும் முற்பட்டதால், அவர் பாதுகாப்புக் கருதி, ஆசனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அதேவேளை, இரண்டு தரப்பு உறுப்பினர்களும் மோதல்களில் ஈடுபட்டதால், சில உறுப்பினர்கள் சிறியளவில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(முற்பகல் 10.30 மணி)

பிரதமர் பதவி எனக்கு முக்கியமில்லை – மகிந்த

நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அவர் உரையாற்றிய வருகிறார்.

தான் ஏற்கனவே, அதிபராகவும், பிரதமராகவும் இருந்த நிலையில் தனக்கு பிரதமர் பதவி முக்கியமில்லை என்று மகிந்த ராஜபக்ச உரையாற்றும் போது, கூறினார்.

தாம் பிறந்ததில் இருந்து, நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது போன்ற ஒரு இருண்ட நிகழ்வை தாம் கண்டதில்லை என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்லுமாறு பரிந்துரைத்து மகிந்த ராஜபக்ச தனது உரையை நிறைவு செய்தார்.
(முற்பகல் 10.14 மணி)

தொடங்கியது நாடாளுமன்ற அமர்வு – மகிந்தவுக்கு ஆசனம் மறுப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், யாரும் பிரதமராக நியமிக்கப்படாததால், பிரதமர் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் யாரும் அமர முடியாது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதற்கு தினேஸ் குணவர்த்தன எதிர்ப்புத் தெரிவித்தார். சிறிலங்கா அதிபரின் முடிவையும் தெரிவித்தார். அதற்கு சபாநாயகர், தான் சிறிலங்கா அதிபருக்கு பதில் அனுப்புவேன் என்றார்.
(முற்பகல் 10.10 மணி)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!