நெருங்கியது கஜா!

கஜா புயலினால் வடக்கில் கடும் காற்றுடன் பெரு மழை கொட்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கஜா புயல் இலங்கைக்கு வடகிழக்கே தற்போது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 480 கிலோ மீற்றர் தூரம் அளவில் வங்காள விரிகுடா கடலின் மத்தியில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து அடுத்த நான்கு மணித்தியாலயங்களில் மேற்கு சார்ந்த தென்மேற்கு திசையினூடாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து செல்வதுடன் இன்று மாலை தமிழகத்தின் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும்.

இதன் தாக்கத்தின் காரணமாக வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று மாலையளவில் பலத்த காற்றுடனான மழை வீழ்ச்சுப் பதிவாகும்.

மேலும் யாழ்பபாணத்தில் இன்று மாலை மணித்தியாலயத்துக்கு 80 முதல் 90 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், மன்னார், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மணித்தியாலயத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாவதுடன், வட மாகாணங்களில் ஏனைய பிரதேசங்களில் 100 மில்லி மீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!