6 இளம்பெண்களுடன் சபரிமலைக்கு செல்வேன் – திருப்திதேசாய் அறிவிப்பு

மண்டல பூஜையின்போது 6 இளம்பெண்களுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக பூமாதா அமைப்பின் தலைவரும், பெண் உரிமைக்காக போராடி வருபவருமான திருப்திதேசாய் அறிவித்து உள்ளார்.

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு தீவிரமாக உள்ளது.

அதேசமயம் சபரிமலை ஐதீகத்தை மீறி இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிக்கமாட்டோம் என்று கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஐப்பசி மாத பூஜை மற்றும் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை ஆட்டத் திருநாள் பிறந்தநாளின் போது சபரிமலை கோவில் நடை திறந்தபோது சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல முயன்ற இளம்பெண்களை தடுத்து நிறுத்தி பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும் இளம்பெண்கள் யாரும் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாத நிலையே உள்ளது.

இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 41 நாட்கள் கோவில் நடை திறந்து இருக்கும். மண்டல பூஜை காலத்தில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த நிலையில் புனேயை சேர்ந்த பூமாதா அமைப்பின் தலைவரும், பெண் உரிமைக்காக போராடி வருபவருமான திருப்திதேசாய் மண்டல பூஜையின்போது 6 இளம்பெண்களுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளதால் மீண்டும் சபரிமலை விவகாரத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

வடமாநிலங்களில் உள்ள சில கோவில்களில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய தடை உள்ளது. இந்த தடையை எதிர்த்து திருப்தி தேசாய் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் சபரிமலைக்கு செல்வேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக திருப்தி தேசாய் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில் சபரிமலை செல்லும் தனக்கு உரிய பாதுகாப்பு கேட்டு கேரள முதல்வர், போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறி உள்ளார். இதுதொடர்பாக திருப்தி தேசாய் கூறியிருப்பதாவது:-

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 6 இளம்பெண்களுடன் சென்று வருகிற 17-ந்தேதி காலை 7 மணிக்கு சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளேன். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கோவிலுக்குள் நுழைவோம். இதற்காக 16-ந்தேதி (நாளை) விமானம் மூலம் நான் 6 இளம்பெண்களுடன் கேரளா செல்கிறேன். நாங்கள் விமானநிலையத்தில் இருந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வரை உரிய பாதுகாப்பை கேரள அரசு எங்களுக்கு வழங்க வேண்டும்.

நாங்கள் கோட்டயத்தில் பாதுகாப்பாக ஓட்டலிலோ, கேரள அரசு விருந்தினர் மாளிகையிலோ தங்க ஏற்பாடு செய்துதர வேண்டும். எனக்கு மிரட்டல்கள் அதிகம் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் நாங்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம். ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமைக்காக போராடத்தான் நான் சபரிமலை செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சபரிமலையில் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று ஐயப்ப தர்மசேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார். திருப்திதேசாயின் சபரிமலை வருகை தொடர்பான அறிவிப்புக்கு ராகுல்ஈஸ்வர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சபரிமலையில் ஐதீகத்தை மீறி இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்ன விலை கொடுத்தாவது அதை தடுப்போம். திருப்திதேசாய்யை சாமி தரிசனம் செய்யவிட மாட்டோம். எங்கள் பிணத்தை தாண்டிதான் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இளம்பெண்களுடன் திருப்திதேசாய் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!