கட்சித் தலைவர்களுக்கு மைத்திரி வாக்குறுதி கொடுக்கவில்லையாம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர்களுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்களுடன் நேற்றுமுன்தினம் நடத்திய கூட்டத்தின் போது, நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா பிரேரணையை இடையூறின்றி- முறைப்படி நிறைவேற்ற உதவுவதாக சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும், ஆனால் அதனை அவர் மீறி விட்டார் என்றும் நேற்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர,

“சிறிலங்கா அதிபரின் நோக்கம் வேறானது. அவர் கட்சித்தலைவர்களுக்கு வாக்குறுதியை வழங்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையியல் கட்டளைகளின் அடிப்படையில் செயற்பட்டால், பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று தான் அவர் கட்சித் தலைவர்களிடம் கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவை நீக்கி விட்டு இன்னொருவரை பிரதமராக நியமிப்பதை ஆதரிப்பதாக சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளிக்கவில்லை.

ஊடகங்களும் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் சிறிலங்கா அதிபரின் கருத்தை தவறாக எடுத்துக் கூறினர்.

நாடாளுமன்றம் அதிபரால் ஒத்திவைக்கப்பட்ட போது, எல்லாக் குழுக்களும் தானாகவே கலைந்து விடும். இந்தக் குழுக்களை மீண்டும் நியமிக்காமல் நாடாளுமன்ற செயல்முறைகளை தொடங்க முடியாது.

ஒவ்வொரு அமர்வுக்குமான நிகழ்ச்சி நிரலை தயாரிக்க நாடாளுமன்ற நடவடிக்கைக் குழு தேவை. இந்தக் குழு இல்லாமல், நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது. நிலையியல் கட்டளைகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு இது ஒரு காரணம்.

நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முன்னர், பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதிபரின் நியமனங்களை கேள்விக்குட்படுத்தும் சட்ட அதிகாரம் சபாநாயகருக்குக் கிடையாது.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாத வரையில், குழப்பங்கள் நீடிக்கும். இந்தக் குழப்பங்களுக்கு சபாநாயகர் தான் பொறுப்பு. ” என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!