குரல் வாக்கெடுப்பை ஏற்கமுடியாது – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை அதிபர் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று, அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினால் மாத்திரமே, நம்பிக்கையில்லா பிரேரணை மீது தன்னால் முடிவெடுக்க முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

குரல் வாக்கெடுப்பை பொருத்தமானதாக கருத முடியாது. ஏனென்றால், இது அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பான முக்கியமான விவகாரம் என்றும் அவர் தெரிவித்தார் என்றும் சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, எல்லா கட்சிகளும் நாடாளுமன்ற நடைமுறைகளை ஜனநாயக ரீதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்தார்.

நேற்றுமாலை அதிபர் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

எனினும், இந்தக் கூட்டத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சபாநாயகர் நிராகரித்திருந்தார். அத்துடன் ஜேவிபியும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தது.

நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம், இயல்பான சூழலில் நடந்ததாகவும் அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள அதேவேளை, இந்தக் கூட்டம் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிந்ததாக அரச தரப்பு உறுப்பினர்களான எஸ்.பி.திசநாயக்க, விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!