புழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு

புழல் ஜெயிலில் உள்ள மன்சூர் அலிகானை இன்று காலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

புழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு
சென்னை:

பிரதமர் மோடியின் சென்னை வருகையை எதிர்த்து கடந்த 12-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது மண்டபத்தின் வெளியே நடிகர் மன்சூர் அலிகான் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். மன்சூர்அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் புழல் ஜெயிலில் உள்ள மன்சூர் அலிகானை இன்று காலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போராட்டம் நடந்தபோது எனக்கு ஆதரவாக பேசிய நடிகர் மன்சூர்அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து ஆறுதல் கூறினேன்.

பத்திரிகையாளர், அரசியல் கட்சி தலைவர்களையும் இழிவாக பேசும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகியோர் இதுவரை கைது செய்யப்படாதது ஏன்? மன்சூர்அலிகானை மட்டும் கைது செய்தது தமிழக அரசின் பழிவாங்கும் நோக்கத்தை காட்டுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பா.ஜனதா கட்சி காலூன்ற நினைக்கிறது. நாங்கள் இருக்கும்வரை அவர்களது கனவு பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!