கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை!

அமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்ற வழக்கில் சிறை ஊழியருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறுவர் சீர்திருத்த சிறை உள்ளது. தண்டனை பெற்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கான உணவு தனியார் நிறுவனத்தில் இருந்து வாகனம் மூலம் கொண்டுவந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘ஃபாஜிடாஸ்’ என்ற உணவு பொருள் அதிகளவில் திருடப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.8 கோடி மதிப்பிலான உணவுப்பொருட்கள் திருட்டு ஃபாஜிடாஸ் என்பது மெக்சிக்கோ மக்களின் பாரம்பரிய உணவாகும். மாட்டு இறைச்சி அல்லது சிக்கனுடன் காய்கறிகளை சேர்த்து தயாரிக்கப்படும், இந்த வகை உணவை திருடி 8 கோடி ரூபாய் அளவுக்கு வெளியில் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

50 ஆண்டு சிறை

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறையில் பணிபுரியும் ஊழியர் கில்பெர்டோ எஸ்காமில்லா (53) என்பவர் கையும் களவுமாக சிக்கினார். அதை தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கில்பெர்டோ எஸ்காமில்லா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!