சாலையை கடந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியது – 5 பேர் உயிரிழப்பு

சீனாவில் சாலையைக் கடந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 5 மாணவர்கள் பலியாகினர்.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங் மாகாணத்தின் ஹூலுடாவ் நகரில் உள்ள துவக்கப்பள்ளிக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்முனையில் இருந்து வந்த மாணவர்கள், பள்ளிக்கு வருவதற்காக சாலையை கடந்து வந்தனர்.

மாணவர்கள் வரிசையாக சாலையை கடந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், மாணவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தவறான பாதையில் கார் வந்ததால் மாணவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மத்திய சீனாவில் பொதுமக்கள் மீது சொகுசு கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!