பெண்கள் வழிப்பாட்டிற்கு சபரிமலையில் 2 நாட்கள் : கேரள அரசு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்வதற்காக 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, 4 பெண்கள் தாங்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய பொலிஸார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நேற்று நீதிமன்றம் விசாரித்த போது, இந்தத் தகவலை கேரள அரசு தெரிவித்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உயர்நீதிமன்றம் கடந்த செப்டெம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலை நடை திறக்கப்பட்ட நாள்களில், சில இளம் பெண்கள் அங்குச் செல்ல முயன்றபோது, பக்தர்கள், இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவும் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே, சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி, ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா சஜீஸ், தான்யா விஸ், சர்வா ஆகியோ 4 இளம்பெண்கள் சார்பில் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டதாவது,

“சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் மட்டும் சாமி தரிசனம் செய்யும் வகையில், வாரத்தில் 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாகத்” தெரிவித்தார்.

ஆனால் அதற்கு மனுதாரர் சட்டத்தரணி தரப்பில், “வாரத்தில் 3 நாட்கள் ஒதுக்க வேண்டும், பெண்கள் வந்து செல்வதற்கு தேவையான வசதிகள், கழிப்பிட வசதிகள், போதுமான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும் “என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து , திருவாங்கூர் தேவஸ்தானம் வரும் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் நிதியை மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி” மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!