மனைவியிடம் வரதட்சணை கேட்டு பெற்ற குழந்தையை தாக்கி உணர்வு இழக்க செய்த தந்தை

ஈரோடு அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு பெற்ற குழந்தையை தாக்கி உணர்வு இழக்க செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹவச்சா (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது ஈரோடு பகுதியை சேர்ந்த அமானுல்லா கான் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அமானுல்லா கான் வரதட்சணை கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமானுல்லா கான் ஹவச்சா கையில் இருந்த குழந்தையின் தலையில் அடித்தார். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அடுத்த நாள் குழந்தையை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தையின் உணர்வு பறிபோனதாக கூறினார். இதனையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஹவச்சா கேரளா சென்றார். அங்கு பல ஆஸ்பத்திரிகளில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். சிகிச்சை அளிக்க அளிக்க குழந்தை அசைவற்று மோசமான நிலையை எட்டியது.

குழந்தையின் இந்த நிலைக்கு காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்ய ஈரோடு வந்தார். ஈரோட்டில் உள்ள போலீசில் குழந்தையின் மருத்துவ குறிப்புகளை இணைத்து கணவர் மீது புகார் அளிதார். ஆனால் புகாரை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹவச்சா நேற்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க புகாரை கூறினார். உரிய போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்காத காரணத்தையும், உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

தந்தையால் தாக்கப்பட்டு உணர்வு இழந்து அசைவற்று கிடக்கும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இதன்பேரில் ஈரோடு மகளிர் போலீசார் அமானுல்லாகான் மட்டும் அவருடைய தாய், அக்காள், சித்தி ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று அமானுல்லாகான் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!