அரசியல் கைதிகள் விவகாரம் – சிறிலங்கா அதிபர் சாதகமான பதில்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சாதகமான பதிலை அளித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று, இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

தன்னைக் கொல்ல வந்த தற்கொலைப் போராளியை சிறிலங்கா அதிபர் விடுவிக்க முடியுமானால், ஏனையவர்களை ஏன் விடுவிக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் நடந்த இந்தச் சந்திப்பு சாதகமானதாக இருந்தது என்றும், இரண்டு வாரத்துக்குள் தாம் தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஆலோசனை நடத்தி தீர்க்கமான முடிவை எடுப்பதாக சிறிலங்கா அதிபர் கூறியதாகவும், கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயங்கள் குறித்து அரசியல் முடிவு ஒன்றை எடுப்பதாகவும் சிறிலங்கா அதிபர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பில், இரா.சம்பந்தனுடன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!