மாணவியை காதலிப்பது போல் நடித்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறித்த வாலிபர் கைது!

நெல்லை டவுன் ஆசாத் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் பிலிப் (வயது18). இவர் பள்ளியில் படிக்கும் போதே ஒழுங்காக படிக்காமல் சக மாணவர்களுடன் தகராறு செய்து மோதலில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து சிறுவர் சிறையில் அடைத்திருந்தனர்.

தற்போது விடுதலையாகி வெளியே வந்த பிலிப் படிக்காமல் ஊர் சுற்றி வந்தார். நெல்லை டவுனை சேர்ந்த ஒரு பிளஸ்-1 மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் பிலிப் அந்த மாணவியின் பின்னால் சென்று தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறினார். அதில் மயங்கிய அந்த மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்தி சினிமா தியேட்டர் உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

மேலும் பிலிப் உல்லாசமாக சுற்றுவதற்கு பணம் தேவைப்பட்டதால், தனது காதலியான பிளஸ்-1 மாணவியிடம் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. இல்லாவிடில் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி பணம்- நகைகளை கேட்டுள்ளார். சில நேரங்களில் கையில் கத்தியை வைத்து கொண்டு இப்பொழுதே கையை வெட்டி தற்கொலை செய்ய போகிறேன் என்றும் நாடகமாடியுள்ளார்.

சில நேரங்களில் மாணவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட செல்போன் படத்தை காட்டி இதை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியும் நகை- பணம் கேட்டுள்ளார். இப்படியே கடந்த 6 மாதத்தில் அந்த மாணவியின் வீட்டிலிருந்து 28 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை ஏமாற்றி பெற்றுள்ளார். அந்த நகைகளை விற்று தனக்கு ஒரு மோட்டார் சைக்கிள், விலை உயர்ந்த செல்போன் மற்றும் காதலியுடன் தொடர்பு கொள்ள அவருக்கும் ஒரு செல்போன் என்று வாங்கி கொடுத்துள்ளார். மற்ற பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து உல்லாசமாக செலவழித்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் ஒரு விசே‌ஷ நிகழ்ச்சிக்காக நகைகளை தேடினர். அப்போது வீட்டிலிருந்த 28 பவுன் தங்க நகைகளும், ரூ.45 ஆயிரம் ரொக்க பணமும் மாயமானதால் அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த நகை- பணம் எப்படி மாயமானது என்று தங்களது மகளான பிளஸ்-1 மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த மாணவி நகை-பணத்தை தனது காதலன் பிலிப்பிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் பிலிப் மாணவியை ஏமாற்றி நகைகளை விற்று உல்லாசமாக செலவழித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பிலிப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!