ஜனாதிபதி தவறை உணர்ந்து ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும்: ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், நாங்கள் இதைவிட தீவிரமாக வேறுபல நடவடிக்கைககளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து நடத்திவரும் சத்தியாக்கிரக போராட்டம் நேற்று (03) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

நாட்டில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நாடுபூராக நடைபெறும் போராட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக வீரியத்துடன் முன்னணியில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. பின்கதவால் அதிகாரத்தைப் பறித்த கும்பலுக்கு எதிரான போராட்டம் இனிமேலும் நீடிக்க முடியாது.

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. கண்முன்னால் தெரிகின்ற தோல்வியை ஏற்றுக்கொண்டு, இவர்கள் கெளரவமாக பதவி விலகாவிட்டால் இதைவிட வீரியமான சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிடும் என்ன எச்சரிக்கை விடுக்கிறோம்.

ஜனாதிபதியின் அரசியலமைப்பு மீறலினால் முழு நாட்டுக்குமே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாதிருந்தும், வெட்கமின்றி ஆட்சியில் தொங்கிக்கொண்டிருப்பவர்கள் நீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும்வரை காத்திருக்காமல் இப்பொழுதே கெளரவமாக விலகிக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் மாத்திரம் அரசாங்கமல்ல. அரசியல் தலைமைகளுக்கு அப்பாலும் அரச பொறிமுறை செயற்படமுடியும். தங்களது அமைச்சு கதிரைகளில் அமர்ந்துகொண்டு மட்டும்தான் அரசாங்கத்தை நடத்தலாம் என்று சிலர் நினைக்கலாம். அரசாங்க பொறிமுறை உரிய முறையில் செயற்படுகிறது. இதுபற்றி மேன்முறையீட்டு நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பின் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முழுமையாக முடக்கப்படவில்லை. இது மக்களை பாதிக்கும் வகையில் இல்லாமல், அமைச்சுப் பதவிகளை திருட்டுத்தனமாக வகித்துக்கொண்டு அநீதியான அரசாங்கத்தைக் கொண்டு கொள்ளையடிக்கும் கூட்டத்துக்கு எதிராகவே இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் எங்களது போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். தங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறக்கூடாது என்பதற்காக பாரளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, சர்வதேசம் எமது பாராளுமன்றத்தை கீழ்த்தரமாக பார்க்கின்ற அளவுக்கு அவர்களது அதிகாரவெறி காணப்படுகிறது.

ஆளும்கட்சி என்று கூறிக்கொள்பவர்கள் செய்தி அட்டகாசங்களினால் நாட்டின் ஜனநாயகம், அரசியல், பொருளாதாரம் என்பன நாளுக்குநாள் சீரழிந்துகொண்டு போகின்றது. அரசியலமைப்பை மீறி, தான் எடுத்த முடிவினால் நாட்டை அதள பாதாளத்துக்கு இட்டுசென்றிருக்கின்ற பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்கிய கடிதத்தின் பிரகாரம், ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை அமைப்பதற்கு ஜனாதிபதி உடனடியாக முன்வரவேண்டும்.

இனிமேலாவது ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், இதைவிட தீவிரமாக நாங்கள் வேறுபல நடவடிக்கைககளில் இறங்கவேண்டியிருக்கும் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

இதில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலதரப்பட்டோரும் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!