உங்களுக்கு செக்ஸியாக நடனமாடத் தெரியுமா? – கால்பந்து வீராங்கனையிடம் கேட்கப்பட்ட கேள்வி எழுப்பிய சர்ச்சை

உலகம் முழுவதும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்னை, ’செக்ஸியம்’ எனப்படும் பாலின ஒடுக்குமுறை! நம் ஊரில் பண்பாடு, கலாசாரம், ஆடை, குடும்ப கெளரவம் எனப் பெண்களை ஒடுக்க, வெளிநாட்டுப் பெண்கள் வேறு விதமான பிரச்னைகளை தினந்தோறும் கையாளுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் பாரிஸில் நடந்திருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு `பாலோன் டி’ஒர்’ (Ballon d’or) நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். இந்த விழாவில், முதன்முறையாக மகளிர் கால்பந்து வீராங்கனைகளுக்கும் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த விருதை, நார்வேயைச் சேர்ந்த 23 வயதான கால்பந்து வீராங்கனை அடா ஹஜிர்பெர்க்குக்கு (Ada Hegerberg) அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற மேடை ஏறிய ஹஜிர்பெர்க்கிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மார்டின் சொல்வேஜ் (Martin Solveig), “உங்களுக்கு செக்ஸியாக நடனமாடத் தெரியுமா?”, என்று கேட்டார். உடனடியாக, “இல்லை!” என்று முகம் சுளித்தபடி மேடையிலிருந்து இறங்க முனைந்தார் ஹஜிர்பெர்க். ஆனால், அங்கிருந்த மற்றொரு தொகுப்பாளர் அந்தச் சூழலை சரிசெய்து இயல்பாக மாற்றினார்.

இந்த விஷயம், ஊடகங்கள், சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாக மாற, சம்பந்தப்பட்ட தொகுப்பாளர் , “நான் நகைச்சுவையாகக் கூறினேன். ஆனால், அது தவறாகிவிட்டது. மற்றபடி நான் பெண்கள் மீது எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன் என்று என்னுடன் 20 வருடம் பயணித்த மக்களுக்குத் தெரியும்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார் . மேலும், ஹஜிர்பெர்க்கிடம் தனிப்பட்ட முறையிலும் மன்னிப்புக் கோரினார் மார்டின்.

இதுகுறித்து பின்னர் ஹஜிர்பெர்க் கூறுகையில், “சில சமயங்களில் இதுபோன்ற விஷயங்கள் மிகவும் சலிப்படைய வைக்கிறது. சில நேரங்களில், சில சூழ்நிலைகளில், “சே..நாம் ஆண்களின் உலகில் வாழ்கிறோம்”, என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அதே சமயம், ஆண்கள் விளையாடும் கால்பந்து விளையாட்டிலிருந்து நான் என்றுமே என்னை வேறுபடுத்திப் பார்த்ததில்லை. நாங்கள் ஒரே விளையாட்டுதான் விளையாடுகிறோம். ஒரே கனவுகள்தான் காண்கிறோம்”, என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!