மதம் குறித்து ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’ எழுதிய கடிதம் 2.9 மில்லியன் டாலருக்கு ஏலம்!

மதம் மற்றும் அறிவியல் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கையெழுத்து பிரதி ஒன்று எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகைக்கு, அதாவது 2.9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

‘கடவுள் கடிதம்’ என அழைக்கப்படும் அந்த கடிதம் 1954 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. நியூயார்க்கில் விடப்பட்ட ஏலத்தில் 1.5 மில்லியன் டாலர்களுக்கு இந்த கடிதம் விற்குமென எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஒன்றரை பக்க கடிதமானது ஜெர்மன் தத்துவ அறிஞர் எரிக் குட்கைண்டுக்கு எழுதப்பட்டது. அறிவியல் மற்றும் மதத்துக்கு இடையேயான விவாதத்தின் முக்கிய சாட்சியமாக இந்த கடிதம் பார்க்கப்படுகிறது.

மனித பலவீனம்: ஐன்ஸ்டீனின் தாய் மொழியான ஜெர்மனியில் எழுதிய இந்த கடிதத்தில் இறை நம்பிக்கை குறித்து விவரித்து இருக்கிறார் அவர். இறைவன் என்ற வார்த்தை எனக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், மனித பலவீனத்தின் வெளிபாடு அது என்று அந்த கடிதத்தில் விவரித்து உள்ளார் ஐன்ஸ்டீன். மேலும் அவர், “பைபிள் மரியாதைக்குரிய விஷயங்களின் தொகுப்புதான். ஆனால், அதுவும் ஒரு மற்றொரு புனைவுதான்” என்கிறார். எப்படி விளக்கம் கூறினாலும், அது எவ்வளவு நுட்பமாக இருந்தாலும், இதில் எதையும் மாற்ற முடியாது,” என்று அந்த கடிதத்தில் விவரித்துள்ளார் அவர்.

யூத அடையாளம்: அவர் தாம் சார்ந்திருந்த யூத மதத்தையும் விட்டுவைக்கவில்லை. அந்த கடிதத்தில், “மற்ற மதங்களை போல இதுவும் பழங்கால மூடநம்பிக்கையின் அவதாரம்” என்று குறிப்பிட்டுள்ளார்”. “நான் சார்ந்த யூத இனமக்களின் மனதில் நங்கூரமிட்டிருந்தாலும், அவர்களும் சரி ஏனைய இனங்களும் சரி அவர்கள் என் மீது கொண்ட பார்வையும் மரியாதையும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது” என்று அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.

முதல் முறையல்ல: ஐன்ஸ்டீனின் கடிதம் ஏலத்தில் விடப்படுவது இது முதல் முறை அல்ல. தன்னை சந்திக்க மறுத்த வேதியியல் மாணவருக்கு அவர் எழுதிய கடிதம் கடந்தாண்டு 6,100 டாலர்களுக்கு விற்பனை ஆனது. சார்பியல் கோட்பாடு குறித்து அவர் எழுதிய கடிதம் 1,03,000 டாலர்களுக்கு விற்பனை ஆகி இருக்கிறது.

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பது குறித்த ஐன்ஸ்டீனின் கடிதம் 1.56 மில்லியன் டாலர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜெரூசலேத்தில் விற்பனை ஆனது. அந்த கடிதத்தில், “வெற்றிகளின் பின்னால் ஓடுவதைவிட, அமைதியான, அடக்கமான வாழ்க்கையே பெரும் மகிழ்ச்சியை கொண்டு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!