அதிக பாதிப்பு – இலங்கைக்கு இரண்டாமிடம்!

உலகில் காலநிலை மாற்றங்களால், அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற காலநிலை அனர்த்தங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

போலந்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் உலக காலநிலை மாநாட்டின் போது பாதிப்பு மிகுந்த காலநிலை கொண்ட நாடுகளில் இதுவரை காலமும் ஏற்பட்ட அனர்த்தங்கள் விகிதாசார அடிப்படையில் வௌிப்படுத்தப்பட்டது. அதில் மிகவும் அபாயகரமான காலநிலை அனர்த்தங்கள் மிகுந்த நாடாக கரிபியன் பிராந்தியத்தின் புவேர்டோரிகோ (Puerto Rico) நாடு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு அடுத்தபடியாக டொமினிகா குடியரசு மூன்றாவது அபாயகரமான நாடாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மியன்மார், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த வருடத்தில் மண்சரிவுகள், வௌ்ளப்பெருக்கு போன்றவற்றால் இலங்கையில் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புள்ளிவிபரங்களின் படி கடந்த 20 வருடங்களில் உலகளாவிய ரீதியாக இடம்பெற்ற காலநிலை அனர்த்தங்கள் காரணமாக சுமார் 5 லட்சத்து 26000 பேர் உயிரிழந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!