தாலி கட்டும் நேரத்தில் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டதால் மாற்றப்பட்ட மாப்பிள்ளை!

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டதால், மாப்பிள்ளை மாற்றப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்திருக்கும் தெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்.

திமுகவைச் சேர்ந்தவரான இவரது மகள் சந்தியா(23)-வுக்கும், அரயாளத்தை சேர்ந்த, சண்முகம் (30) என்பவருக்கும், திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகனான சண்முகம் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால், நேற்று முன் தினம் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் கலந்து கொண்டார்.

இதற்கு முன்னதாக திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு முன், ராஜகோபால் தரப்பினர், தி.மு.க. கொடி கட்டி, பேனர் வைத்திருந்தனர். அதுமட்டுமின்றி வரவேற்பு நிகழ்ச்சியில் சிவானந்தத்துடன் போட்டோவில் நிற்க, மணமகன் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. அப்போது மணமகனின் அண்ணன் கார்த்திக், மண்டபத்தில் இருந்த இருக்கைகளை உடைத்தார். அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் திருமணத்துக்கு வரவுள்ள நிலையில், எப்படி தி.மு.க. பேனர் வைக்கலாம் என, மணமகன் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டனர்.

திருமணத்துக்கு முன்பே, மணமகன் வீட்டார், இவ்வளவு மிரட்டல் விடுக்கின்றனர். திருமணம் நடந்தால், என் வாழ்க்கை நரகமாகிவிடும் என்று கூறி மணமகள் சந்தியா திருமணத்திற்கு மறுத்தார். இதையடுத்து, ராஜகோபால் தங்கை சரஸ்வதி மகன் ஏழுமலை(27) என்பவர், திடீர் மாப்பிள்ளையானார். நேற்று காலை, அங்குள்ள அம்மன் கோவிலில், இருவருக்கும் திருமணம் நடந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!