அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்கள் வித்தியாசமான முறையில் கௌரவிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நாடியா முராட் மற்றும் டெனிஸ் முக்வெஜ் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் தீப்பந்தங்களுடனான வித்தியாசமான பேரணியொன்று இடம்பெற்றது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நூற்றுக் கணக்கானோர் கூடி நேற்று (திங்கட்கிழமை) இப்பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

வீதியில் பாடல்களை இசைத்தவாறு, ஆரவரித்து வந்தவர்களை நோபல் பரிசு பெற்ற வெற்றியாளர்கள் விடுதியின் மாடியில் இருந்து கண்டுகளித்தனர். யுத்தங்களின் போது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக போராடியமைக்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. நாடியா முராட், ஈராக்கின் யஷிதி மக்களுக்கு எதிராக, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக போராடினார். குரலற்றுக் கிடந்த அம்மக்களின் குரலாக ஒலித்த நாடியா, மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு எதிராக போராடி அவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுத்தார்.

அத்தோடு அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ளும் டெனிஸ் முக்வெஜ் ஒரு வைத்தியராவார். இவர், ஆயுத மோதலின்போது இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பெண்களுக்கெதிரான உரிமை மீறலுக்கு எதிராக அச்சமின்றி குரல்கொடுத்தவராவார். பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்துகொடுக்க கொங்கோ அரசை வலியுறுத்தியதோடு, இலவச மருத்துவ உதவிகளை வழங்கி பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு பெற உதவினார். இவர்களின் இந்த அளப்பரிய பணிக்காகவே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!