குழந்தையை கொன்று தந்தை தற்கொலை – வறுமையால் விபரீதம்.

கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 24). இவரது மனைவி ஜெயா. இவர்களது 1½ வயது மகன் கிஷோர். சுரேஷ் பனையூரில் உள்ள டாக்டர் ஒருவரது வீட்டில் காவலாளியாக வேலை பார்த்தார். அவருக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றி அவர் மனைவி ஜெயாவிடம் அடிக்கடி கூறினார். சுரேசை மனைவி சமாதானப்படுத்தி வந்தார். வறுமையால் தவித்த சுரேஷ் மகனை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று வருத்தம் அடைந்தார். இதையடுத்து அவர் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

நேற்று இரவு சுரேஷ் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் எழுந்த அவர் மகன் கிஷோரை மட்டும் எழுப்பி வி‌ஷம் கலந்த தண்ணீரை கொடுத்தார். அதில் உயிரை கொல்லும் வி‌ஷம் கலந்து இருப்பதை அறியாத அவன் அதனை குடித்தான். சிறிது நேரத்தில் கிஷோர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தான். இதையடுத்து சுரேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடந்த விபரீதம் அறியாமல் ஜெயா தூங்கிக் கொண்டு இருந்தார்.

இன்று அதிகாலையில் அவர் எழுந்து பார்த்த போது மகன் கிஷோர் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருப்பதையும், கணவர் சுரேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கிடப்பதையும் கண்டு அலறி துடித்தார். தகவல் அறிந்ததும் கானத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேர் உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது சுரேசின் சட்டைப்பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் வருமானம் இல்லாததால் மகனை கொன்று தற்கொலை செய்வதாக எழுதப்பட்டு இருந்தது.

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுரேசின் மனைவி ஜெயாவிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!