ஞாயிறன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில்

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை மறுநாள்- ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

எனினும், மகிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது போனதாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளாலும், பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு பிரதமர் பதவியில் இருந்து விலக, மகிந்த ராஜபக்ச முடிவு செய்திருக்கிறார். இதனை அவர் சிறிலங்கா அதிபரிடம் அறிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச நாளை பதவி விலகிய பின்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

எனினும், நாளை தியத்தலாவ இராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார். இதனால் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வு தாமதமாகலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் சற்று முன்னர், சிறிலங்கா அதிபரும் ரணில் விக்கிரமசிங்கவும் இடையில் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.

இதன்போது, நாளை மறுநாள் காலை 10 மணிக்கு சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐதேக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!